தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தற்போது வெள்ள நீர் வடிந்து சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், அது மேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற 18ம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.
அதனால் சென்னையில் 2 நாட்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் 684 தண்ணீர் இறைக்கும் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.