தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணன்-தம்பிகள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள நெத்திமேடு கே.பி.கரடு வடபுறம், வக்கீல் செட்டியார் தோட்டம் பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மூர்த்தி என்ற மகன் இருந்தார். இவர் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மூர்த்திக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர் ஜெகதீஸ் என்பவருக்கும் இடையில் தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஜெகதீசுடன் வந்திருந்த அவருடைய அண்ணன் சதீஷ், தம்பி விக்னேஷ் மற்றும் நண்பர் பூமிநாதன் ஆகியோர் சேர்ந்து மூர்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஜெகதீஷ் தரப்பினர் மூர்த்தியை தாக்கியுள்ளனர். இதன் காரணமாக மனவேதனையில் வீட்டுக்கு சென்ற மூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யாவிட்டால் மூர்த்தியின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். அப்போது உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் சமாதானமடைந்த உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மூர்த்தியின் உடலை பெற்று கொண்டனர். இதனிடையில் மூர்த்தியை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெகதீஷ், விக்னேஷ், சதீஷ், பூமிநாதன் ஆகிய 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.