உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டிய பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அதற்காக அவர் போர் விமானத்தில் வந்து சாலையில் தரை இறங்கினார். அதனை தொடர்ந்து இந்திய விமானப்படை விமானத்தில் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை சுட்டி காட்டி திரிணாமுல் காங்கிரஸ் மூத்தத்தலைவர் யஷ்வந்த் சின்கா மோடியை கேலி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இனி தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்தரப்பிரதேசத்துக்கு பிரதமர் மோடி வரும் போதெல்லாம் குடியரசு தின அணிவகுப்பு பாணியில் ராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும். அதற்கு நான் சிபாரிசு செய்கிறேன். மேலும் விமானப்படை விமானங்கள் சாகச நிகழ்ச்சி நடத்த வேண்டும். இவை அனைத்தும் அரசு செலவில் நடைபெற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.