மாற்றுத்திறனாளி தம்பதியினர் அரசு வேலை வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலவாடி பகுதியில் சுரேஷ்-முத்துலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இந்நிலையில் தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு தம்பதியினர் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி கோரிக்கையை வலியுறுத்தி தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் அரசு வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்றால் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.
மேலும் அவர்கள் கழுத்தை அறுத்து கொள்வோம் என கத்தியை காட்டியும் மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தம்பதியினரிடம் இருந்த விஷபாட்டில் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் கூறியபோது “அந்த தம்பதியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தம்பதியினருக்கு பசுமை வீடு, மானியத்துடன் வங்கி கடன் உதவி, தையல் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஏற்கனவே அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது தம்பதியினர் வேலை வழங்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டதோடு, தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.