23 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஹாங்காங், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஓமன் உள்ளிட்ட எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டன.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. இதில் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அண்டர் 23 அணி , பாகிஸ்தான் அண்டர் 23 அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தன் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் ஒமைர் யூசுப், ஹைதர் அலி ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். இதில் சிறப்பாக விளையாடி யூசுப் அரை சதமடித்து அசத்தினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பதர், நஷிர் இணையும் சிறப்பாக விளையாட, பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 267 ரன்களை எடுத்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஒமைர் யூசுப் 67 ரன்களையும், பதர் 47 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் ஷிவம் மாவி, ஷிவம் தூபே, ஷொகீன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் சரத், ஜுயல் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.
இதில் சரத் 47 ரன்களிலும், ஜுயல் 17 ரன்களிலும் வெளியேற, பின்னர் வந்த சன்வீர் சிங் அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார். அவருடன் இணைந்து அர்மான் ஜாஃபரும் அதிரடியை வெளிப்படுத்தினார். பின் 76 ரன்களில் சன்வீர் சிங் வெளியேற இந்திய அணியின் வெற்றிக் கனவு கலைந்தது.
இருப்பினும் கடைசி வரை போராடிய இந்திய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
📸 📸
Winning moments for Pakistan in what was a thrilling semi-final!#INDvPAK #ETAC2019 pic.twitter.com/CminyRzRrF
— AsianCricketCouncil (@ACCMedia1) November 20, 2019