கிணற்றிற்குள் கார் பாய்ந்து தந்தையும், மகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு லிங்கா நகரில் வீரா என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு உமாலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு சுஸ்மிதா என்ற மகள் இருந்தார். இதில் சுஸ்மிதா அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் உமாலட்சுமி தனது கணவர் மற்றும் மகளுடன் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து அவர்கள் கார் மூலம் மீண்டும் பெங்களூருக்கு புறப்பட்டனர். அப்போது காரை வீரா ஓட்டி சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள பொன்னேரி எனும் இடத்தில் அவர்கள் வந்தபோது முன்னால் சென்ற லாரி சாலையில் தேங்கி நின்ற மழைநீர் பள்ளத்தின் வழியாக சென்றது. அப்போது பள்ளத்தில் லாரி டயர் இறங்கியதால் தண்ணீர் சாலையில் பீய்ச்சியடித்தது. இதன் காரணமாக லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த கார் கண்ணாடி முழுவதும் தண்ணீர் சிதறியது. இதில் நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த செல்வத்தான் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தது.
அப்போது வண்டியின் கதவு திறந்ததால் உள்ளே இருந்த உமாலட்சுமி நீந்தி மேலே வந்தார். இதனையடுத்து உமாலட்சுமி அருகில் இருந்தவர்களிடம் கிணற்றில் கார் விழுந்தது குறித்து தகவல் தெரிவித்துவிட்டு மயக்கமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் வீரா மற்றும் சிறுமியை மீட்க முடியவில்லை. இதன் காரணமாக மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.
மேலும் இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், எம்.எல்.ஏ,க்கள் கே.பி.அன்பழகன், சம்பத்குமார், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் இன்பசேகரன், தடங்கம் சுப்பிரமணி, செந்தில்குமார் எம்.பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீரா மற்றும் அவரது மகளான சுஸ்மிதா இருவரின் உடல்களும் இறந்த நிலையில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையில் மயங்கி விழுந்த உமாலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.