அசர்பைஜான்-அர்மீனிய நாடுகளின் இராணுவ வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 8 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசர்பைஜான் நாட்டிற்கும் அதன் பக்கத்து நாடான அர்மீனியாவிற்கும் இடையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் போர் ஏற்பட்டது. ஆறு வாரங்களாக தொடர்ந்து போர் நடந்திருக்கிறது. இதில் அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த, நாக்ரோனா-கராபாக் என்னும் மாகாணம், அசர்பைஜானின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.
அந்த போரில் மொத்தமாக 6 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பலியானார்கள். அதன் பின்பு ரஷ்ய அரசு தலையிட்டு இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தது. எனினும், அடிக்கடி எல்லைப் பகுதியில் இரு நாட்டு பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இந்நிலையில், நாக்ரோனா-கராபாக்கின் எல்லைப்பகுதியில், நேற்று இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையில் திடீரென்று ஏற்பட்ட மோதலில், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 வீரர்கள் பலியாகியுள்ளனர். அதில், 7 வீரர்கள் அசர்பைஜான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஒரு வீரர் அர்மீனிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
அர்மீனிய அரசு, தங்கள் நாட்டைச் சேர்ந்த 24 ராணுவ வீரர்கள் மாயமானதாகவும், அசர்பைஜான் நாட்டை சேர்ந்த 13 வீரர்களை பிடித்து வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறது.