ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது.
இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத், அஷார் அலி ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை 65 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்திருந்த போது, பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பைச் சேர்த்த இணை என்ற சாதனை படைக்கப்பட்டது.
அதன்பின் ஷான் மசூத் 27 ரன்களிலும், அஷார் அலி 39 ரன்களையும் அடித்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம், ஹேரிஸ் சோஹைல் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன் மூலம் அந்த அணி 78 ரன்களுக்குள்ளாகவே நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் களமிறங்கிய அசாத் ஷாஃபிக், அஹ்மத் இணை தற்போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 45 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து, 94 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்ஹூட் இரண்டு விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.