ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டத்திலுள்ள வேட்டுபாளையம் பகுதியில் சின்னசாமி-மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு அமுதா, பூவிழி ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இதில் பூவிழிக்கு இன்னமும் திருமணம் முடியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் சின்னசாமி உடல் நலக்குறைவால் பரிதாபமாக இறந்துவிட்டார். இவருடைய மூத்த மகள் அமுதாவுக்கு வடிவேல் என்பவருடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தனன்யா என்கிற மகள் இருந்தார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமுதா தன் மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இவர்களில் அமுதா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இதில் அமுதாவின் மகளான தனன்யா அதே பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் மல்லிகாவின் 2-வது மகளான பூவிழி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதன் காரணமாக மனமுடைந்த மல்லிகா அவரது மகள் அமுதா மற்றும் தனன்யா ஆகியோர் அவமானத்தில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளனர். அதன்பின் மல்லிகா வழக்கம்போல் உறங்கச் சென்றார். இதனைத்தொடர்ந்து மறுநாள் நீண்ட நேரமாகியும் மல்லிகாவின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மல்லிகா வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு ஒரு அறையில் மல்லிகாவும் மற்றொரு அறையில் அமுதா மற்றும் தனன்யாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.