Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உயிரிழந்த மூதாட்டி…. பொதுமக்கள் சாலை மறியல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எடையந்தாங்கல் கிராமத்தில் 100-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதில் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு செல்ல பாதை இல்லாத காரணத்தினால் விவசாய நிலங்களில் வழியாக உடலை மயானத்திற்கு எடுத்து செல்கின்றனர். இதனால் மயானத்திற்கு செல்ல பாதை அமைத்துத் தருமாறு பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் 75 வயது மூதாட்டி இறந்துள்ளார். இவரின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தித் தருவதாக அவர்களிடம் உறுதியளித்துள்ளார். இதன் காரணத்தினால் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து மூதாட்டியின் உடலை நெற்பயிர்கள் விளைந்து இருக்கும் விவசாய நிலத்தின் வழியாகவும் மற்றும் ஓடை கால்வாய் வழியாக இடுப்பளவு நீரிலும் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்துள்ளனர்.

Categories

Tech |