சென்னை மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பழனிக்குமார். மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பழனிக்குமார் சென்னை மவுண்ட் காவலர் குடியிருப்புப் பகுதியில் தனது மனைவி விமலா, மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பழனிக்குமார் தனது பணியை முடித்துக்கொண்டு நள்ளிரவு 12:30 மணியளவில் வீட்டிற்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மகாகவி பாரதியார் நகர் பணிமனை அருகே சென்று கொண்டிருந்தார்.
பழனிக்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில், நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மாநகராட்சி குப்பை ஏற்றிச் செல்லும் லாரி காவலர், பழனிக்குமார் மீது எதிர்பாராத விதமாக மேலே ஏறி இறங்கி உள்ளது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தலைமைக் காவலர் பழனிக்குமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தலைமைக் காவலர் பழனிக் குமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாநகராட்சி குப்பை லாரி ஓட்டுநரைக் கைது செய்து விபத்து தொடர்பாக, மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் இந்த விபத்து குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.