வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று இரவு சென்னை தியாகராயநகர், தேனாம்பேட்டை, மெரினா, சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணியில் பலத்த மழை பெய்தது. மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு மற்றும் கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக இரவு நேர பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பொதுமக்கள் ஏராளமானோர் அவதிப்பட்டனர். இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் , விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதில் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்த 2 நாட்களுக்கு குடிநீர், உணவு, பால் மற்றும் காய்கறிகளை இருப்பு வைத்துக்கொள்ள பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மழை தொடர்பான புகார் மற்றும் உதவிகளுக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.