இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்ட விவரங்கள் வருடாந்திர கல்விநிலை (ASER) 2021 என்ற பெயரில் வெளியாகியுள்ளன. அதன்படி மொத்தம் 76,706 குடும்பங்கள் மற்றும் 5 முதல் 16 வயது வரையிலான 75,234 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதில், தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களின் சேர்க்கை 2018ல் 32.5 சதவீதமாக இருந்தது.
இது 2021ல் 24.4 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா வந்த பிறகு அதிக அளவில் , மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளிகளில் 2018ல் சராசரி மாணவர் சேர்க்கை 64.3% ஆக காணப்பட்டது. இது கடந்த வருடம் 65.8% ஆகவும், நடப்பாண்டு 70.3% ஆகவும் உயர்ந்துள்ளது. 2018ல் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த 15 -16 வயதுடைய மாணவர்கள் 57.4% ஆக இருந்தது. இது 2021ல் 67.4% ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததற்கு வட இந்திய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா ஆகியவையும், தென்னிந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.