தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. அவ்வாறு ஒரு தனியார் பள்ளி அரசு அங்கீகாரம் பெறுவதற்கு அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்க வேண்டும். அதன்படி ஏற்கனவே வெளியிடப்பட்ட விதிகளில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு புதிய விதிகளை இணைத்து மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி பள்ளி வளாகம் குறிப்பிட்ட பரப்பளவில் அமைந்து இருக்க வேண்டும். அதற்கான சான்று, கட்டிட சான்று மற்றும் தடையில்லா சான்று உள்ளிட்ட ஆவணங்கள் ஆகியவற்றை சமர்பித்தால் அரசு அதனை பரிசீலனை செய்து அங்கீகாரம் வழங்கும்.
ஆனால் தமிழகத்தில் தற்போது பல்வேறு தனியார் பள்ளிகள் சரியான இடவசதி, கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆக அரசால் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகள் பூர்த்தி செய்யாமல் இருக்கின்றன. அதனை தனியார் பள்ளிகள் சரி செய்து ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு அரசு பல ஆண்டுகளாக வாய்ப்பு வழங்கி வருகிறது. ஆனால் தகுந்த இட வசதி கிடைக்காத காரணத்தால் அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தனியார் பள்ளி நிர்வாகம் திண்டாடுகின்றது. அதனால் அங்கீகாரத்தையும் இழந்து வருகிறது.
அந்த குறிப்பிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அரசு அங்கீகாரம் வழங்கவும் முடியாமல் , ரத்து செய்யவும் முடியாமல் இருக்கிறது. தற்போது அந்த குறிப்பிட்ட தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த கால இடைவெளிக்குள் கட்டிடசான்று , தடையில்லா சான்று, நிரந்தர உட்கட்டமைப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்களை தனியார் பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.