வங்கக் கடலில் கடந்த 13ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெதுவாக நகர்ந்து தற்போது மேற்கு திசையில் இருந்து தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்குகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புதுச்சேரியில் உள்ள கிழக்கு, தென்கிழக்கு திசையில் 300 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பத்தூரில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக இன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படும் நிலையில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.