தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை முதல் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக கடலூர் நகர பகுதியில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது முதல் கடலூர் நகர பகுதிகளில் வேகமாக காற்று வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் குறிஞ்சிப்பாடி அடுத்த வானதி ராயபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம் ஒன்று முழுவதும் இடிந்து சேதம் ஆகியுள்ளது.
தொடர் கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த நிலையில், தற்போது பள்ளி கட்டிடம் இடிந்துள்ளது. அதனால் அந்தப் பள்ளியில் கல்வி பயின்று வரும் 30க்கும் அதிகமான மாணவர்கள் தற்போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். நேற்று வரை இருந்த பள்ளி கட்டிடம் இன்று திடீரென இல்லாமல் போனதைக் கண்டு மாணவ மாணவிகள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.