ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக மழை சேதங்களை பார்வையிட்ட காரணத்தினால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் அதற்கு ஓபிஎஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் விளைவாக பல்வேறு மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். அதிமுக சார்பிலும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் புவனகிரி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் சிதம்பரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வாங்கிய ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் நாங்கள் இருவரும் தனித்தனியாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததால் பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தாங்கள் தற்போது ஒன்றாக இணைந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.