பென்சில்வேனியாவில் மாயமான விமானத்தில் இருந்த தந்தை மற்றும் மகள் ஐபேடில் வந்த சிக்னல் மூலமாக காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.
பென்சில்வேனியா நாட்டின், பிட்ஸ்டன் டவுன்ஷிப்பில் இருக்கும் வில்கஸ்-பார் ஸ்க்ரான்டன் என்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து, செஸ்னா 150 என்ற ஒரு என்ஜின் விமானத்தில், விமானி, ஒரு நபர் மற்றும் அவரின் மகள் ஆகிய மூவர் பயணித்திருக்கிறார்கள். விமானம் புறப்பட்டு சென்ற, சில நிமிடங்களில் ரேடாரிலிருந்து மாயமானது.
அதன்பின்பு, அந்த விமானத்தை தீவிரமாக தேடி வந்தனர். விமானம் இறுதியாக தெரிந்த இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் 30 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக தேடுதல் பணியை மேற்கொண்டனர். முதலில், விமானி மீட்புக் குழுவினரால் கண்டறியப்பட்டார். அதன்பின்பு தந்தை மற்றும் மகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அந்த சமயத்தில், சிறுமி வைத்திருந்த ஐபேடிலிருந்து சிக்னல் வந்திருக்கிறது, அதை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்துவிட்டார்கள். சுமார் 5 மணி நேரமாக தேடுதல் பணி நடந்திருக்கிறது. தந்தை மற்றும் மகள் இருவருக்கும் சிறிய காயங்கள் தான் ஏற்பட்டிருக்கிறது. எனவே, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.