தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். அதன் பிறகு மக்களின் அன்றாடத் தேவைகளுக்காக அத்தியவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அதனை தொடர்ந்து தேங்கியுள்ள மழை நீரால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுவதாலும், கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக குறையாததால் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.