நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், உமா மகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜனனி. பதினொன்றாம் வகுப்பு இடைநின்று வீட்டிலிருந்த ஜனனி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ராஜ் குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இரண்டு முறை வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி,18 வயது பூர்த்தி ஆகாததால், திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெற்றோரால் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜனனிக்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் நான்கு நாட்களே மீதமிருக்கும் நிலையில், அதன்பின் காதலன் ராஜ்குமாருடன் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததால், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற தாய் உமா மகேஸ்வரி பெற்ற மகள் என்றும் பாராமல், மண்ணெண்ணையை ஊற்றி ஜனனியை கொளுத்தியுள்ளார்.
பின்னர் அவரும் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. இந்த ஆணவ வெறியாட்டத்தில் ஜனனியின் உயிர் பிரிந்தது. தாய் உமா மகேஸ்வரிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.