தமிழகத்தில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்கு ஒன்றியக்குழு தமிழகம் வருகிறது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே வட தமிழகம் – தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் 25 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன.
அதில் 12 மாவட்டங்கள் அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குடிசைகள் மற்றும் கட்டுமான வீடுகள் இடிந்து உள்ளன. மேலும் மழை சேதங்களை ஆய்வு செய்வதற்கு அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முதல்வரிடம் அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து முதல்வர் முக. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான வேளாண் நிதி, ஜல்சக்தி, எரிசக்தி, சாலைப்போக்குவரத்து, ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த குழு ஆய்வு செய்வதற்காக தமிழகம் வருகிறது. மழை சேதத்தை பார்வையிட்டு கணக்கீடு செய்து ஒன்றிய உள்துறையிடம் அறிக்கை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.