பி.எஃப் தொகை முறையாக பணியாளர் கணக்கில் சேர்க்கப்படாததால் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஏராளமான தினக்கூலி தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் பி.எஃப் தொகை முறையாக பி.எஃப் அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி ஆணையாளர் சேகருடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பி.எஃப் தொகை கணக்கில் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தினக்கூலி பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க தலைவர் ஜெயன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து செயலாளர் ஜெயபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜெயராஜ் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதனை அறிந்த கூடலூர் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது வருகின்ற 25ஆம் தேதிக்குள் பிஎஃப் தொகை பணியாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும் என நகராட்சி ஆணையர் சேகர் உறுதி அளித்த பின்னரே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.