புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகிலுள்ள ராங்கியம் விடுதி கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசித்து வருபவர்களுக்கு ராங்கியம் விடுதி ஊராட்சியில் மயானம் இல்லை. அதனால் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் உள்ள குளத்தை பல ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த மயானத்திற்கு செல்ல பாதை வசதி ஏதும் இல்லாததால் பிணத்தை வயல்வெளி வழியாக தூக்கி அவலம் நிடித்து வருகிறது. மேலும் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை எரிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த தெருவை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலை வயல் வழியாக எடுத்துச் சென்று கொட்டும் மழையில் தகரத்தை பிடித்தபடி நல்லடக்கம் செய்தனர். இதுகுறித்து ராங்கியம் விடுதி ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் இளைஞர் அமைப்பு கூறியது, எங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கூடம், அங்கன்வாடி கட்டிடம், சுகாதார வளாகம் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றிற்கு தனி நபர்கள் இடங்களை அரசுக்கு ஒதுக்கி கொடுத்து உள்ளோம்.
ஆனால் எங்கள் சொந்த ஊர் ஊராட்சியில் மயானம் இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் மழை காலங்களில் இருந்தவர்களை நல்லடக்கம் செய்ய பெரும் கஷ்டமாக உள்ளது. எனவே ஆதி திராவிட மக்களுக்கு மயான கொட்டகை அமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.