பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் வரும் 22ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த போதும் தமிழ்நாடு அரசு அதனை குறைக்கவில்லை. மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று 25 மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. ஆனால் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை இன்னும் குறைக்காமல் உள்ளது.
பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து வருகிற 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது: “பல மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட போதிலும், தமிழ்நாட்டில் மட்டும் விலையை குறைக்கவில்லை. திமுக அரசு தங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் மீதான வரியை மட்டும் குறைத்தது. டீசல் மீதான வரியை குறைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதேசமயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்ற போது பாஜக தலைவர் அண்ணாமலை வாய்மூடி மவுனம் காத்தார். ஆனால் தற்போது மத்திய அரசு வரியை குறைத்ததும், தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக ஏன் அறிவித்துள்ளார்? என்று கேள்வியை திமுகவினர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.