சண்முகநதி அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் 52.50 அடி உயரம் கொண்ட சண்முகநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்ன ஒவுலபுரம், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், அப்பிபட்டி, ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம் போன்ற 30க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் நிரப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகுதியில் அப்பகுதியில் பெய்து வரும் பெய்த கனமழை காரணமாக சண்முகநதி அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சண்முகநதி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மலர்தூவி தண்ணீரை திறந்து வைத்தார். மேலும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 14.47 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது வருகின்ற 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் தேவைக்கு ஏற்ப பாசனத்துக்காக தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார். இதனைதொடர்ந்து நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஒ கவுசல்யா, தாசில்தார் அர்ஜுன், உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் முருகேசன், ராயப்பன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாதுரை மற்றும் விவசாயிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.