Categories
மாநில செய்திகள்

சண்முகா நதி அணை திறப்பு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் பல்வேறு அணைகள் நிரம்பியது. அதன்படி மேகமலை வேவிஸ் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் தேனி மாவட்டத்திலுள்ள சண்முக நதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தமிழக அரசு அதை ஏற்றுக்கொண்டு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

அதன்படி தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 14.47 கன அடி வீதம் சண்முகநதி கால்வாய் தண்ணீர் திறந்து வைத்தனர். இந்த தண்ணீர் ராயப்பன்பட்டி, மல்லிங்கபுரம், சின்னஓவுலாபுரம், கண்ணிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், அழகாபுரி, வெள்ளையம்மாள்புரம் மற்றும் ஓடைப்பட்டி ஆகிய கிராமங்களிலுள்ள 1640 ஏக்கர் நிலங்கள் பயன்பெற கூடிய வகையில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 52.50 அடி, நீர் இருப்பு 79.57 கன அடி மற்றும் நீர் வரத்து 16 கன அடியாக உள்ளது. மேலும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது அனைவரும் மலர்களை தூவி தண்ணீரை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயி பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |