Categories
மாவட்ட செய்திகள்

கனமழையால் ஆழியாறு பகுதி சாலையில் பள்ளம்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையினால் பொள்ளாச்சி அருகில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வால்பாறையில் ரோட்டில் வனத்துறை சோதனை சாவடி அருகில் உள்ள சாலையோரத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

இதனால் வாகனங்களை கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர். இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் அந்த பள்ளம் ஏற்பட்ட அதே பகுதியில் சாலையின் நடுவில் 5மீ அகலம் மற்றும் 4 அடி ஆழத்திற்கு மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றது. வால்பாறைக்கு செல்பவர்களும் மற்றும் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு திரும்பியவர்களும் பெரும் அவதி அடைந்தனர்.

இதையடுத்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பரணிதரன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் உமா மகேஸ்வரி, உதவி பொறியாளர் பிரகாஷ் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்கள் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி, ஜல்லி கற்களை கொட்டி சமப்படுத்தி அந்த பள்ளம் சரி செய்யப்பட்டது. இதனால் அந்த சாலையில் காலை 7 மணி முதல் 11 மணிவரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியது “கனமழையின் காரணமாக சாலை ஓரத்தில் மழை நீர் ஆறு போல ஓடியது. அந்தப் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் சாலையை கடந்து சென்றதால் மீண்டும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் தண்ணீர் சாலையை கடக்க சிறிய அளவில் பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்

Categories

Tech |