பெற்றோர் கண்டித்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாலூர் கிராமத்தில் சேட்டு-ராஜாத்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மஞ்சு என்ற மகள் இருந்தார். இந்நிலையில் சேட்டுக்கும், அவரது மனைவி ராஜாத்திக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்காக சென்ற மஞ்சுவை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த மஞ்சுவின் உறவினர் ஒருவர் சத்தமிட்டார். இதனையடுத்து கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி நிலைய அலுவலர் செல்வமணி தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மஞ்சுவின் சடலத்தை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மஞ்சுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.