மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது, பாஜக அரசு உங்களுக்கு செய்த கொடுமையால் துவண்டு போகாமல், இடைவிடாமல் போராடிய ஒவ்வொரு விவசாயிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது உங்களுடைய வெற்றி. மேலும் இந்த போராட்டத்தில் தங்கள் குடும்பத்தினரை இழந்து அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.