தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் பாலியல் புகார்கள் வரும் போது நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கோவையில் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரால் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது.
எனவே பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரச்சனை என்றால் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. அதனால் பல பள்ளிகள் பிரச்சனைகளை விசாரிக்காமல் விட்டு விடுகின்றன.அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் பாலியல் புகார்கள் வரும்போது பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என்றும் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.