சீன நாட்டின் குவாங்சோ பகுதியிலிருந்து நியூயார்க் நகரத்துக்குச் சென்ற விமானத்தில், பயணம் செய்த முதியவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் பயணித்த மருத்துவர்கள் ஜாங்ஹாங் மற்றும் ஜாங்க்சியாங் ஆகியோர் அவரை பரிசோதனை செய்ததில், முதியவர் உடலில் ஒரு லிட்டர் சிறுநீரைக் கழிக்காமல் வைத்துள்ள காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது எனக் கண்டுபிடித்தனர்.
எனவே, உடனடியாக சிறுநீரை வெளியேற்றினால் தான் உயிரோடு இருப்பார் என்னும் காரணத்தினால், தீவிர சிகிச்சையில் ஈடுபட முடிவு செய்தனர். விமானத்திலிருந்த ஆக்ஸிஜன் மாஸ்க், சிரஞ்ச் மற்றும் ஸ்ட்ரா ஆகியவற்றைக் கொண்டு சிறுநீரை வெளியேற்றும் ஒரு கருவி அமைப்பை உடனடியாக உருவாக்கினர். பின்னர் சிறுநீரைப் பிரித்தெடுக்க சிரஞ்சை ஜாங் பயன்படுத்தினார். இருப்பினும், அது செயல்படவில்லை. நோயாளியின் சிறுநீர்ப்பை மிகவும் உயர்த்தப்பட்டதால் அழுத்தம் பிரித்தெடுப்பதைக் கடினமாக்கியது. இதனையடுத்து, சிறுநீரை வாயால் உறிஞ்சு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் தானே, சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றத் தொடங்கினார். சுமார் 37 நிமிடங்களில் 700-800 மில்லிலிட்டர் சிறுநீரை உறிஞ்சி வெளியே எடுத்தார். விமானம் தரையிறங்கியதும், நோயாளி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஜாங்கின் நம்பமுடியாத சிந்தனை வயதான மனிதனின் உயிரைக் காப்பாற்றியது. இதனால் ஜாங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இவர் ஒரு ரியல் ஹீரோ என பலரும் பாராட்டி வருகின்றனர்.