பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பரிசு வழங்க வேண்டும் என முதல்வரிடம் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “பொங்கல் திருநாளை ஒட்டி நிதி உதவியுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் நிதி உதவி இல்லாமல் வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் திமுக அரசு அறிவித்திருப்பது பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்கப்பட்டு வருகின்றது.
2020ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 2 ஆயிரத்து 500 ரூபாய் நிதி உதவி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது . ஆனால் ‘அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன்; என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படும் நிதி உதவியை கைவிட்டது. நடைமுறையிலிருக்கும் திட்டத்தை கைவிடுவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதவற்றை திமுக அரசு செய்து வருகிறது.
‘சொன்னதையும் செய்வோம் சொல்லாத எதையும் செய்வோம்; என்று கூறினார்கள். அது இதுதான் போல. பொங்கல் பண்டிகைக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்துவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல். எனவே முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு ஏழை எளிய மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2500 ரூபாயை தொடர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.