இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் உடைந்து படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ள சருகணி கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள கடம்பூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்திய சந்திரன் குடிபோதையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் சந்திரன் இடுப்பில் சொருகி வைத்திருந்த மது பாட்டில் உடைந்து அவரது வயிற்றில் குத்தி படுகாயமடைந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவாடனை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.