கர்நாடகா மாநிலம் மண்டியாவில் அபிஷேக்(19)என்பவர் வசித்துவருகிறார். இவர் பெங்களூர் காந்தி நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி அன்று அபிஷேக் தனது சொந்த ஊர் மண்டியாவுக்கு பெங்களூருவில் இருந்து ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீரங்கப்பட்டணா அருகில் உள்ள லோகபவானி ஆற்றுப்பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் பெட்டியின் கதவின் அருகில் நின்று கொண்டிருந்த அபிஷேக் ஆற்றுபாலத்துடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது திடீரென ஆற்றில் தவறி விழுந்தார். தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். ஆனால் இதுபற்றிய தகவல் யாருக்கும் தெரியவில்லை. அதனால் அபிஷேகின் பெற்றோர் அவர் மாயமாகி விட்டதாக பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் மண்டியா ரயில்வே போலீசார் அபிஷேக் பயணம் செய்து வந்த ரயில் விவரம் மற்றும் இதில் பயணம் செய்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தான் அவர் செல்பி எடுத்த போது இரும்பு பாலத்தில் மோதி ஆற்றில் தவறி விழுந்ததாக தெரியவந்தது. இதையடுத்து இவரது உடலை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக பணியில் ஈடுபட்டனர். ஆனால் 5 நாட்கள் ஆகியும் அவரது உடல் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சம்பவ இடத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் அபிஷேக்கின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அதனை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக போலீசார் ஸ்ரீரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.