சென்னையில் பிரபல ரவுடி கூறிய தகடு போன்ற பொருளால் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கியதில் அவருக்கு கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் பல்சர் பாபு. இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தின் காளகஸ்தி புத்தூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சென்ற வாரம் நடைபெற்ற கொள்ளை வழக்கு தொடர்பாக பல்சர் பாபு கைது செய்யப்பட்டு புத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்பொழுது காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றார் பாபு.
இதையடுத்து அவர் சென்னையில் இருப்பதை அறிந்த ஆந்திரா காவல்துறை அதிகாரிகள் சென்னை காவல் அதிகாரிகளின் உதவியுடன் பாபுவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர் வசித்து வரும் காசிமேடு பகுதிகளில் தேடல் சோதனை நடத்திய போது பாபு அங்கு இல்லாததால் அவரது செல்போன் சிக்னலை ட்ரெஸ் செய்தனர். அப்போது அவர் கிழக்கு கடற்கரை பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு பாபு குறித்து தகவல் அளிக்கப்பட வாகன பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பாபு காவல்துறையினரை கண்டதும் இருசக்கர வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அவரை விரட்டி பிடித்த ராஜேஷ் மற்றும் சுதர்சன் என்ற காவல்துறை அதிகாரிகளை கையில் வைத்திருந்த தகடு போன்ற பொருளால் தாக்கினார். இதில் ராஜேஷ் என்ற அதிகாரிக்கு கழுத்தில் காயம் ஏற்பட சுதர்சன் அவரை இறுக்கமாக பிடித்தால் சுதர்சனின் கையை கடித்து விட்டு தப்பி ஓட முயன்றார்.
அப்போது அவர் விடாமல் பிடித்து மற்ற அதிகாரிகள் வந்தவுடன் காவல் நிலையத்திற்கு தூக்கிச் சென்று பின் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாபு கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதும் அவரை பிடிக்க வந்த ஆந்திர காவல்துறையினர் அவர்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பிச் சென்றனர்.