தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது புதிதாக திருமணம் ஆனவர்களும் அதிகமாக புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். உணவு வழங்கல் துறைக்கு சென்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் மூலமாக நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே எளிதாக விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு காலதாமதமின்றி 15 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் விரைவில் உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைத்துவிடும். இப்போது ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
- முதலில் www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் மின்னணு அட்டை என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும். பெயர், மாவட்டம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, இருப்பிட முகவரி ஆகியவற்றை உள்ளிடவும்.
- குடும்பத் தலைவர் புகைப்படம்’ என்ற இடத்தில், குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படம் 5MB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- குடும்ப அட்டையில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமானால் புதிய பக்கத்தை திறந்து, அதில் குடும்பத் தலைவரின் பிறந்த தேதி, தொழில், மாத வருமானம், வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
- குடும்ப தலைவரின் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
- குடும்ப அட்டை தேர்வில் எந்த வகை ரேஷன் அட்டை வேண்டுமோ அதை தேர்வு செய்யவும்.
- நீங்கள் பதிவு செய்ததை சரிபார்த்து கடைசியாக சேமி என்பதை கிளிக் செய்து குடும்ப உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
- இருப்பிட சான்றிதழ் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பதிவேற்ற வேண்டும். மேலும் எரிவாயு இணைப்பு விவரங்களை பதிவு செய்யவும்.
- அதன் பிறகு உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒரு பதிவு எண் அனுப்பப்படும். இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் உங்களுடைய புதிய ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ளலாம்.