நிலப்பட்டா வழங்கக்கோரி உயர் மின்கோபுரத்தில் ஏறி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கல்பட்டி டால்மியா போர்டு பகுதியில் உயர் மின்கோபுரத்தில் ஏறிய ஒரு ஆண் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயர் மின்கோபுரத்தில் இருந்த அவரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் கோபுரத்தில் ஏறி அந்த நபர் மீது கயிறு கட்டி அவரை பாதுகாப்பாக கீழே இறங்கி வந்தனர். அதன்பின் அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் பெயர் அண்ணாமலை என்று தெரியவந்தது. இவருக்கு ராமாயி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர்.
மேலும் அண்ணாமலை காவல்துறையினரிடம் கூறியபோது “வெள்ளக்கல்பட்டி காந்தி நகர் பகுதியில் தற்காலிகமாக நாங்கள் வசித்து வருகிறோம். கடந்த 25 வருடங்களாக டால்மியா போர்டு எம்.ஜி.ஆர். நகர் ரயில்வே நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருடன் நாங்கள் குடியிருந்து வந்தோம். அந்த இடத்தை ரயில்வே காவல்துறையினர் அகற்றிய பின் மாற்று இடம் தருவதாக கூறி இருந்தனர். ஆனால் இதுவரை மாற்று இடம் வழங்க வில்லை. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் வீட்டுமனை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக வீடு, நிலம் இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம். இதனால் மனமுடைந்த நான் உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தேன்” என்று கூறினார். இதனைத்தொடர்ந்து அண்ணாமலைக்கு காவல்துறையினர் தகுந்த அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.