சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் பெயிண்டரான கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கோபால் கடையநல்லூரிலுள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் மற்றும் அவருடைய உறவுக்காரப் பெண் இருவரும் சேர்ந்து கோபாலை வெளியே வரவழைத்து தகராறு செய்துள்ளனர். அதன்பின் இருவரும் சேர்ந்து கோபாலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கோபாலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 12 வயது சிறுமிக்கு கோபால் பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்துள்ளது. இதனால் அந்த சிறுமியின் உறவினர்கள் கோபாலை தாக்கியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பிச் சென்ற இருவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் கோபாலை அவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.