ஸ்விட்சர்லாந்து அரசு புகலிட கோரிக்கையாளர்கள், அவர்களது நாட்டின் உள்நாட்டு யுத்தத்தால் தனிப்பட்ட வகையில் துன்புறுத்தப்பட்டதை நிரூபித்தால் தான் புகலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்ததற்கு விமர்சனம் எழுந்துள்ளது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் Anja Klug கூறுகையில், அகதிகளுக்காக சுவிட்சர்லாந்து நாட்டின் வரையறையானது, மட்டுப்படுத்தும் வகையில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இவற்றால் சில மக்கள் பாதிப்படைவார்கள் என்று கூறியிருக்கிறார்.
Anja Klug, இது குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டில், நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில், சில மக்கள் எதிரணியில் இருப்பவர்கள் என்றோ அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்பட்டோ துன்புறுத்தப்பட்டால், அவர்கள், தங்கள் நாட்டில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று நிரூபிக்க முடியாது, அது சிரமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, சிரிய நாட்டில் ஒரு குடும்பத்தார் வசித்த குடியிருப்பில், எதிரிகள் இருப்பதாக சந்தேகித்து, வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. ஆனால், அது தனிப்பட்ட முறையில் அவர்களை குறிவைத்து தாக்கினார்கள் என்பதற்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, அந்த குடும்பத்தினருக்கு சுவிட்சர்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்குத் தான் அனுமதி கிடைத்திருக்கிறது.
சுவிட்சர்லாந்தில், இதுபோன்று தற்காலிகமாக வசிப்பவர்கள், அகதிகள் நிலையில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் பலன்களை பெற முடியாது. அவர்கள், வேலை தேடும் சமயத்தில், அதிக பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு, நாட்டு மக்களுடன் சேர்ந்து வாழக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று கூறியிருக்கிறார்.