Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானிற்கு உதவ இந்தியா தயார்!’.. ஐ.நாவிற்கான இந்திய தூதர் உறுதி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவ தயாராக இருப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதரான டிஎஸ் திருமூர்த்தி உறுதியளித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது கடுமையான உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, இந்திய நாட்டின், ஐ.நாவிற்கான தூதர் டி.எஸ் திருமூர்த்தி கூறியுள்ளதாவது, சுமார் இருபது வருடங்களையும் தாண்டி, இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது.

தற்போதும், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் இந்தியாவில் கல்வி பயில அரசு நிதி உதவியளிக்கிறது. அந்நாட்டில், சமீபகாலமாக உள்நாட்டு போர் ஏற்படுவதால், அங்கு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் மக்கள், உணவு, மருந்து போன்ற அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை உதவிகளை தடை ஏற்படாமல் கொடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கையை இந்திய அரசு ஆதரிக்கிறது. உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை மீண்டும் ஆப்கானிஸ்தானிருக்கு அனுப்ப இந்தியா தயாராக இருக்கிறது.

அதே சமயத்தில், மதம், இனம் மற்றும் அரசியல் போன்ற எந்த பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் அடிப்படை உதவிகள் சென்று சேர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |