Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உயிரை பணயம் வைத்து போறோம்” அச்சத்தில் கிராம மக்கள்…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றனர். இவற்றில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வில்வனூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த 2 கிராமங்களுக்கும் இடையில் வசிஸ்ட நதி செல்கிறது. இதற்கிடையில் ஆற்றில் அடிக்கடி தண்ணீர் செல்வதால் வில்வனூர் பகுதி மக்கள் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக இடையபட்டி கிராமம் வழியாகத்தான் வெளியூர் செல்ல வேண்டியது இருக்கிறது. இந்நிலையில் தற்போது பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வில்வனூர் பகுதி மக்கள் ஊரை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருக்கின்றனர். எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் செல்ல வேண்டுமென்றால் கூட மக்கள் கயிறு கட்டி ஆற்றை கடந்து செல்கின்றனர். இந்த முயற்சி ஆபத்தானது என்று தெரிந்தும் வேறு வழி இல்லாமல் தங்களது உயிரை பணயம் வைத்து அப்பகுதி மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர். எனவே இந்த கிராம மக்களின் நலன் கருதி இடையபட்டியில் பாலம் அமைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது. இது தொடர்பாக கிராம மக்கள் கூறியபோது “ஆற்றில் வெள்ளம் வரும் வேளையில் இதுபோன்று கயிறு கட்டிதான்  கடந்து போகிறோம். அப்போது உயிர்பலி ஏற்பட்டு விடுமோ என்ற பயம் ஒரு பக்கத்தில் இருந்தாலும் வேறு வழியின்றி எங்களது பயணம் தொடர்கிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து தனிக்கவனம் செலுத்தி எங்களது கிராமத்திற்கு பாலம் அமைத்து தர வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |