Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல் நாளே இந்த 3 சட்டங்களையும் வாபஸ் பெறுங்க….. மு.க.ஸ்டாலின் கோரிக்கை…!!!

நாடாளுமன்றத்தில் முறையாக மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இதைத்தொடர்ந்து முக ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தெரிவித்துள்ளதாவது: “3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி அவர்கள் நேற்று காலை அறிவித்திருப்பதை மனப்பூர்வமாக ஏற்கிறேன். கடந்த ஓராண்டு காலமாக இந்த சட்டங்களுக்கு எதிராக போராடிய பெருங்குடி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. மூன்று சட்டங்களை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவந்த மத்திய அரசு விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் மனமிரங்கி மூன்று சட்டங்களையும் ரத்து செய்துள்ளது.

இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோது திராவிட முன்னேற்ற கழகம் இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது. மேலும் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து திமுக ஆட்சி ஏற்ற பிறகு இந்த சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். கடந்த ஓராண்டு காலமாக நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாங்கள் சொன்னதே சரியானது என்பது இப்போது பிரதமர் ஒப்புக் கொள்கிறார். இதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் முறையாக இந்த மூன்று சட்டங்களும் திரும்பப் பெற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்கவேண்டும். போராடிய விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.  இந்த கோரிக்கையை ஏற்று செயல்படுத்துவதன் மூலமாக அவர்களுக்கு மேலும் நம்பிக்கை உருவாகும். இந்திய வேளாண்மை செழிக்க வேண்டும் என்றால் அது உழவர்களின் மூலமாகத்தான் செழிக்கும். அதற்கு அடித்தளமான ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை மத்திய அரசு இனியாவது செயல்படுத்த வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பிற மக்கள் விரும்பாத சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |