கட்டிட காண்டிராக்டரை அடித்து கொலை செய்த பொக்லைன் ஆபரேட்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் தங்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட காண்டிராக்டரான இவர் வீடுகட்டும் பணிகளுக்காக மணல் அள்ளும் பொக்லைன் எந்திரத்தை வாடகை எடுப்பது வழக்கம். இதனை இயக்குவதற்காக அதே ஊரை சேர்ந்த பாண்டியன் என்பவரை வேலைக்கு வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கையா பாண்டியனை வேலைக்கு அழைக்காமல் இருந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அட்டணம் பட்டியில் உள்ள டீக்கடை அருகே தங்கையா நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற பாண்டியன் தனக்கு வேலை கொடுக்காததது குறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைதொடர்ந்துதங்கையாவை சரமாரியாக தாக்கி அவரை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்து மயங்கிய தங்கையாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேவதானப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தங்கையா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த தங்கையாவின் குடும்பத்தினர் பாண்டியனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தேவதானப்பட்டி காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்கையாவை அடித்து கொலை செய்த பாண்டியன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.