ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் ஆடைகள் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடைகள், ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. ஆடைகள் மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் என்று நவம்பர் 18-ஆம் தேதி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்திருந்தது. அதன்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் துணிகள் ஆடைகள் விகிதம் 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடைகள், செயற்கை, நூல் துணிகள், போர்வை உள்ளிட்ட பொருட்கள் விலை உயரும். மேலும் செருப்புகளுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதனால் செருப்புகளின் விலையும் உயரும் என்று தெரிகிறது.
இந்த அறிவிப்பு ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட தொழில் துறையினர் இடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நூல் பொருட்களின் விலை உயர்வால் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஆடைகள் மீதான ஜிஎஸ்டி உயர்த்தப்படுவது மேலும் தொழிலை பாதிக்கும் என்று அச்சப்படுகின்றனர்.