பேக்கரி உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள காராமணிக்குப்பம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரவி தன்னுடைய மகளின் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். அதன்பின் அவரது மகன் சந்தோஷ் பேக்கரி பூட்டிவிட்டு உறவினர் ஒருவருடன் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றுள்ளார்.
பின்னர் படம் முடிந்ததும் சந்தோஷ் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைப்பற்றி சந்தோஷ் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் கொள்ளை நடந்த வீட்டிற்கு நேரில் பார்வையிட காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டின் மேற்கூரையில் ஓடுகள் பிரித்து வைக்கப்பட்டு இருந்ததை காவல்துறையினர் பார்த்தனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 15 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறை மோப்பநாய் கண்டுபிடிக்காத வகையில் மர்ம நபர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி விட்டு பின் பக்க வாசல் வழியாக தப்பி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.