திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள அம்பிகாபுரம் அம்பேத்கர் தெருவில் புரட்சிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் கவிப்பிரியா என்பவருக்கும் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பின் கணவர் வீட்டில் இருந்த கவிப்பிரியா திடீரென தூக்குப்போட்டு இறந்து விட்டதாக அவரின் தந்தை நடராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட நடராஜன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மகள் கவிப்பிரியாவை நேரில் சென்று பார்த்துள்ளனர். பின்னர் இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த கவிப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக நடராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கவிபிரியாவுக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா என கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.