தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான் அமைப்பினர் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உலக நாடுகள் மற்றும் உலக வங்கி போன்றவை அந்த நாட்டுக்கு அழைத்து வந்த நிதி உதவியை நிறுத்தி விட்டன.
அதனால் அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் சம்பளம் வழங்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.