திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் நேற்று இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடு ஒன்றை திருடி சென்றதை பார்த்துள்ளார். இதனையடுத்து அவர்களை பிடிக்க எஸ்எஸ்ஐ பூமிநாதன் முயன்றபோது அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதால் அவர்களைத் துரத்திப் பிடிக்க பூமிநாதன் முயன்றுள்ளார்.
பூமிநாதன் பிடியில் சிக்காமல் திருச்சி மாவட்டத்தை கடந்த கொள்ளையர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி எனும் கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை அருகே வந்தபோது அந்த சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அதைத் தாண்டி செல்ல வழியில்லாமல் அங்கு நின்று உள்ளனர். இதனையடுத்து அவர்களை பின்தொடர்ந்து வந்த எஸ்எஸ்ஐ பூமிநாதன் ஆடு திருட்டு கொள்ளையர்களை பிடிக்க முயன்று உள்ளார்.அப்போது கொள்ளையர்கள் இருவரும் எஸ்எஸ்ஐ பூமியைநாதனை கடுமையாகத் தாக்கியதோடு மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இதற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். பணி நேரத்தில் காவலர்கள் கொல்லப்படுவதற்கு விரைவில் சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.