பிரேசிலில் புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசில் தெற்கு பகுதியிலுள்ள பரானா மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்போது சுமார் 8 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பிரேசில் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கெல்னர் கூறியபோது “இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பு ஆகும். ஏனெனில் இது இதுவரை அறியப்படாத ஒரு புது இனத்தை சேர்ந்த டைனோசர் ஆகும்.
இவ்வகை டைனோசர்கள் பெர்தசவ்ரா லியோபோல்டினே என அறியப்படுகிறது. இவை 7 முதல் 8 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவை ஆகும். இதில் 80 செ.மீ உயரம், ஒரு மீட்டர் நீளமும் கொண்ட இந்த டைனோசர்கள் வாழ்நாள் முழுவதும் பற்கள் இல்லாமல் இருந்துள்ளது” என்று அவர் கூறினார். இதற்கிடையில் இந்த டைனோசர் இனத்துக்கு பிரேசிலிய விலங்கியல் ஆர்வலர் பெர்தா லூட்ஸ் மற்றும் ராணி மரியா லியோபோல்டினா ஆகியோரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.