கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அடிமாலி பகுதியில் ஷீபா என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் திருவனந்தபுரத்தில் புஜப்புரா பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்நிலையில் ஷீபா தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அருண்குமாரை வற்புறுத்தி உள்ளார். அப்போதுதான் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன என்று அருண் குமாருக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஷீபாவிடம் சந்தித்து பேசுவதை நிறுத்திவிட்டார். ஆத்திரமடைந்த ஷீபா அருண்குமாரை சமாதானம் பேசுவதற்கு அடிமாலி அழைத்துள்ளார். இதையடுத்து அவர் மற்றும் அவரது நண்பர்களுடன் நேற்று அடிமாலிக்கு சென்று இரும்பு பாலத்தின் அருகில் ஷீபாவுடன் தனியாக பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஷிபா திடீரென்று ஆசிட் எடுத்து அருண்குமார் முகத்தில் வீசிவிட்டார்.
அதன் பிறகு அருண்குமார் அலறித்துடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது நண்பர்களும் ஓடிவந்து அருண்குமாரை சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த அடிமாலி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் அருண்குமாரிடம் விசாரணை நடத்தினார். அப்போது “ஷீபாவை பேஸ்புக் மூலம் அறிமுகமாகி இருவரும் காதலித்தோம். தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தேன். அதனால் அவர் பணம் கேட்டு மிரட்டிய போது கொடுக்க மறுத்ததால் என் மீது ஆசிட் வீசினார்” என்று அவர் கூறியுனார். இதையடுத்து போலீசார் ஷீபாவை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.